Mayiladuthurai Newsகாவிரியாற்றில் ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் குளித்தால், ஒரு ஆயிரம் ஆண்டு குளித்த பலன் - Mayiladuthurai News காவிரியாற்றில் ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் குளித்தால், ஒரு ஆயிரம் ஆண்டு குளித்த பலன் - Mayiladuthurai News

காவிரியாற்றில் ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் குளித்தால், ஒரு ஆயிரம் ஆண்டு குளித்த பலன்

மயிலாடுதுறையில் இன்று முதல் துலா ஸ்நானம் தொடக்கம். காசிக்கு சமமாகக் கருதப்படும் காவிரியாற்றில் ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் குளித்தால், ஒரு ஆயிரம் ஆண்டு குளித்த பலன். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டுமென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது. ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் பகவான் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது. ஐப்பசி மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும். எனவே இம்மாதம் துலா மாதம் எனப்படுகிறது. மேலும் சூரியன் துலா ராசியில் பிரவேசிப்பதாலும் இப்பெயர் பெற்றதாகச்சொல்வர். ஐப்பசி மாதம் முழுவதும் காவேரியில் நீராடினால் பாவங்கள் அழியும்: புண்ணியம் சேரும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இம்மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன் றரை மணி நேரத்திற்குமுன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது. ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை- காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம். புண்ணியத்தை நாடும் பக்தர்கள் ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நானம் செய்வார்கள். கடைசிநாள் முடவன் முழுக்கு என்று விசேஷமாக ஸ்நானம் செய்வதுண்டு. கடைமுகம் என்றும் அழைப்பதுண்டு.