Mayiladuthurai Newsஜெயலலிதா என்னும் அசாத்திய ஆளுமை - Mayiladuthurai News ஜெயலலிதா என்னும் அசாத்திய ஆளுமை - Mayiladuthurai News

ஜெயலலிதா என்னும் அசாத்திய ஆளுமை

காலஞ்சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அரசியல் வாழ்வில் சாதனை புரிவதற்கு பல தடைகளை ஆரம்ப காலங்களில் சந்தித்தார். ஒரு பெண்ணாக, குறிப்பாக நடிகையாக ஜெயலலிதா இருந்தது, மேலும் திராவிட அரசியலின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள பிராமண வகுப்பை சேர்ந்தவர் அவர் என கருதப்பட்டது ஆகியவை அவர் சந்தித்த தடைகளாகும். ஆனால், அசாதாரண அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான ஜெயலலிதா, தான் சந்தித்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை புரிந்தார். கடந்த 1982-ஆம் ஆண்டில், கடலூரில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் ஜெயலலிதா தனது முதல் அரசியல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது நடிகை என்ற ரீதியில் அவர் கடுமையாக எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும் தனி நபர் தாக்குதலுக்கும், உதாசீனத்துக்கும் உள்ளானார். அரசியல் வெற்றிடத்தை நிரப்பியவர். கடுமையான விமர்சனங்கள் மற்றும் தனிநபர் தாக்குதல்களை சந்தித்து வந்த ஜெயலலிதா, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோரைப் போல சொல்லாற்றல் மிக்கவர் அல்ல. மொழி வித்தகராகவோ, அடுக்குத் தொடரில் புலமைப் பெற்றவரோ இல்லையெனினும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியிலும், அரசியல் தளத்திலும் எழுந்த வெற்றிடத்தை, தன் கடின உழைப்பாலும், அரசியல் குறித்த உன்னிப்பான பார்வையாலும் ஜெயலலிதாவால் நிரப்ப முடிந்தது. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதா, அதிகமாக வாசிக்கும் பழக்கம் உள்ளவர் என்றும், இப்பழக்கமும், நினைவாற்றலும் அவர் கட்சி பொறுப்பில் மேலும் முன்னேற பெரிதும் உதவியது. கட்சித் தொண்டர்கள், ஊடகங்கள் என்று பலராலும் அணுக முடியாதவரான ஜெயலலிதா, சிறந்த நிர்வாகத் திறனுள்ள அதிகாரிகளின் துணை கொண்டு, தனது ஆளுமை திறனால் ஆட்சி நடத்தியவர். யாரையும் நம்பாத தனது குணத்தால், இரும்புக்கரம் கொண்டு ஆட்சியையும், கட்சியையும் நடத்திய போக்கு ஆரோக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம் என்றாலும், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவர் சந்தித்த எண்ணற்ற சிக்கல்களையம், ஏமாற்றங்களையும் சமாளிக்க அவருக்கு அந்த இரும்புக்கரம் தேவைப்பட்டது என்பதே நிதர்சனமான உண்மை. இவரைப் போல் இராணுவ கட்டுப்பாட்டோடு கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தியவர் யாருமில்லை. முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் தமிழர் நெஞ்சத்தில் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் சாதனைகள்

1991 -ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.

1998 -ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.

2001 -ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.

2011 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

2011 -ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (தற்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது.

2014 -ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37-இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.

2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227-இல் நேரடியாகவும், 7-இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 -ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016-இல் தான்.

மேலும் 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.

2011 சட்டப்பேரவை தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டப்பேரவை தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.