Mayiladuthurai Newsகங்கை, யமுனை நதிகளை புனிதமாக்கிய மயிலாடுதுறை காவிரி - Mayiladuthurai News கங்கை, யமுனை நதிகளை புனிதமாக்கிய மயிலாடுதுறை காவிரி - Mayiladuthurai News

கங்கை, யமுனை நதிகளை புனிதமாக்கிய மயிலாடுதுறை காவிரி

காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராகக் கருதப்படுகின்றன.  அவை

1.திருமயிலாடுதுறை, 2.திருவையாறு, 3.திருவெண்காடு, 4.திருவிடைமருதூர், 5.திருவாஞ்சியம்,  6.திருசாய்க்காடு   இவற்றில் மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறை திருத்தலம், மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதால், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான், மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நதியாக நீராடித் தங்கள் பாவச் சுமைகளை நீக்கிப் புனிதம் பெறலாம் என்று அருளினார். 

அதன்படி, ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடி, தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு புனிதம் அடைந்தன. அவர்களுடன் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் போன்றோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர். ஆகையால், துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

கங்கைக்கே புனிதம் தரும் நதியாக காவிரி விளங்குவது சிறப்புக்குரிய ஒன்றாகும். ஐப்பசியில் முதல் நாளன்று முதல் முழுக்கு, அமாவாசையன்று அமாவாசை முழுக்கு, மாத நிறைவு நாளன்று கடைமுழுக்கு என மூன்று நாட்களிலும் காவிரி தென்கரையில் மாயூரநாதர், மாயூரம் ஐயாறப்பர், காசி விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பஞ்சமூர்த்திகளுடனும், வடகரையில் வேதாரண்யேஸ்வரர் எனும் வள்ளலார், பஞ்சமூர்த்திகளுடனும் காவிரி துலாகட்டத்தில் காட்சிதரும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இப்படி பல பெருமைகள் பெற்ற மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு சப்தஸ்தான தலங்கள் என போற்றப்படும் ஏழூர் கோயில்கள் உள்ளன. அவை

1. மயிலாடுதுறை – ஐயாறப்பர் கோயில்
2. தனியூர் – புனுகீஸ்வரர்
3. சித்தர்காடு – பிரம்மபுரீஸ்வரர்
4. மூவலூர் – மார்க்கசகாயர்
5. சோழம்பேட்டை – அழகியநாதர்
6. துலாகட்டம் – காசிவிஸ்வநாதர்
7. மயூரநாதர் 

மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு நான்கு திசைகளிலும் நாற்றிசை வள்ளல்கள் உண்டு. அவை

1. கிழக்கே திருவிளநகரில் துறைகாட்டும் வள்ளல்
2. தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல்
3. மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல்
4. வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல்

மேலும், காவிரிக்கரை விஸ்வநாதர் மூவர் உள்ளனர். அவை

1. கூறைநாடு காசிவிஸ்வநாதர்
2. படித்துறை காசிவிஸ்வநாதர்
3. துலாகட்டம் காசிவிஸ்வநாதர்

இவை தவிர, மயிலாடுதுறையைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் சுற்றுக்குள் திருஇந்தளூர் திருக்கோயில், கழுக்காணி முட்டம் திருக்கோயில், பல்லவராயன் பேட்டை திருக்கோயில், கருங்குயில்நாதன் பேட்டை திருக்கோயில், நல்லத்துக்குடி திருக்கோயில் ஆகியவையும் உள்ளன.