Mayiladuthurai Newsகஜா பராக் பராக் - Mayiladuthurai News கஜா பராக் பராக் - Mayiladuthurai News

கஜா பராக் பராக்

மயிலாடுதுறை நவம்பர் 14, இந்த புயலுக்கு கஜா என்று பெயர் வைத்ததற்கு பதில் குழப்பம் என்று பெயர் வைத்து இருக்கலாம். அந்த அளவிற்கு இந்த புயல் வானிலை மையத்தை குழப்பி வருகிறது. முதலில் ஸ்ரீஹரிகோட்டா அருகே இந்த புயல் கடக்க இருந்தது. அதன்பின் சென்னை கடலூர் அருகே கடக்கும் என்று கூறப்பட்டது. இப்போது பாம்பன் கடலூர் அருகே கடக்க உள்ளது. இந்த புயலில் தற்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயலின் வேகம் குறைந்த காரணத்தால் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. புயல் இன்று காலை வரை 10-20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. ஆனால் இன்று காலையில் திடீர் என்று 6கிமீ வேகம் என குறைந்து தற்போது மீண்டும் 10 கிமி என வேகம் அதிகரித்துள்ளது. அதே சமயம் கண்டிப்பாக இன்று இந்த புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறுவது உறுதி என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று மாலை தமிழகத்தில் மழை பெய்யும். பெரும்பாலும் இன்று இரவில் இருந்து புயலின் வேகமும் அதிகரிக்கும். நாளை பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், இன்று மாலையில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் எனவும் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை அதீத மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் அலை ஒரு மீட்டருக்கும் மேல் உயரக்கூடும் என்பதால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக‌ கூறப்படுகிறது. கஜா புயலின் காரணமாக நாகை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (15-11-2018) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.